Wednesday, May 4, 2016

1998 (5)

காதலுக்கு கண்ணில்லை
காலமும் அதற்கு தடையில்லை
நாற்பது வயதில் நாய்க்குணமாம்
நான் ஏன் அதற்கு விதிவிலக்காம்?

பருவத்தின் கோளாறு கேட்டதுண்டு
பாவையர்க்கும் இது பொருந்தும் நன்று
பருவம் வந்த பாவையர் சிலரும்
பாதிரி என்னை அணுகியதுண்டு.

அப்போதெல்லாம் அமைதியிழந்தேன்
ஆயினும் என்னை அடக்கி வாழ்ந்தேன்
ஆண்டவர் அருளும் சேரப்பெற்றால்
அவனியில் நானும் வெற்றி கொள்வேன்.
1998

இன்றுவரை இயன்றளவு பாடுபட்டோம்
இறையரசை இதுவரையும் நழுவவிட்டோம்
இயேசு சொன்ன இறவாத வார்த்தைகளை
இழந்ததனால் இப்படியே இருந்துவிட்டோம்.

இரண்டாயிரம் ஆண்டேன்று கொண்டாட
இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கி
இனியேனும் முயன்று விட்டால் அதுவேபோதும்
இறையரசு தானாக தழைத்துவரும்.

இறையரசை இயக்கமாக இயேசு தந்தார்
இயக்கத்தை அமைப்பாக்கி சபை என்றோம்
அமைப்பதிலே அதிகாரம் இயல்பாக
அதை நாமோ இயேசு இல்லா சபைஎன்றோம்.

கொடியோடு சேராத திராட்சைஎல்லாம்
வரண்டுபோக வாழ்விழந்து நிர்க்குமன்றோ
அதுபோல iஇயேசு இல்லா சபை கூட
அவனியிலே அர்த்தமின்றி போகுமன்றோ
1998
நாம் பிறக்க
நமை யாரும் கேட்கவில்லை
நாம் இறக்க
நம் விருப்பம் தேவையில்லை.

நமக்கு மேலே ஒருவனுண்டு
நமை ஆளும் கடவுளுண்டு
நாம் வாழும் நாட்களெல்லாம்
நல்ல அவன் கணக்கன்றோ?

துயரங்கள் வருவதுண்டு
துன்பங்கள் தொடர்வதுண்டு
தூய அவன் துணை கூட
தொடர்ந்து வரும் நம்பு.

துன்பத்திலே 'இன்பமுண்டு
துயரத்தில் 'உயர'முண்டு
'
து'மட்டும் நீக்கிவிட்டால்
இன்பமாக உயர்ந்திடலாம்.

கடும்கோபம் உனக்குமட்டும் உளதல்ல
மாநிடராம் மற்றனைவர்க்கும் அதுவுண்டு
கண்டபடி காரணமின்றி வரும்போதே
கவலையினை அது நமக்கு தரக்கூடும்.

பிறர் நம்மை கோபமூட்ட வழியுண்டு
பிளவுபட்ட மனம் கூட அது செய்யும்
பிளவிற்கு காரணத்தை கண்டுவிட்டால்
பிரகேது கோபம் பின் எது தாபம்?

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை
விரும்புவதோ கிடைப்பதில்லை
இதன்பொருட்டு மனமுடைந்தால்
இனியுள்ள வாழ்க்கையும் கசக்கும்.


நாம் முதலில் மீள வேண்டும்
பிறரை நாம் மீட்பதற்கு
நாம் முடிவில் மடிதல் போதும்
பிறர் இன்னல் அகற்றிவிட்டு.

நமை நாமே அறிதல் வேண்டும்
நலமப்போதே கிடைத்துவிடும்
நம்பிக்கையுடன் முயலவேண்டும்
நமக்கு வரும் வெற்றி உறுதி.

மரணத்தை மறந்து விடு
மறுபடியும் வாழ்ந்துவிடு
மடிகின்ற மனிதத்திற்கு
மறக்காமல் வழிகாட்டு.
உண்மை தேடும் உள்ளங்களே
உறவே அதுவென்று உணருங்களே
உறவில்லாதொரு உயிர் வருமோ?
உயிரில்லாதது உலகாமோ?

உள்ள நிலை உண்மை நிலை
இல்லையெனில் பொய்மை நிலை
உள்ளநிலை உணர்வதர்க்கே
உயிரொன்று வேண்டுமன்றோ?

உணர்ச்சியின்றி உறவுண்டா?
உறவின்றி உயிருண்டா?
உயிரின்றி உலகுண்டா?

உயிரினை என்றும் கொண்டாடுவோம்
உயிரினை இன்றே மதித்திடுவோம்.
5.     கவி பாடு...[1998]

அண்ணன் என்றால்
கவிதை ஊற்று
காட்டாறாய் பாய்கிறதே
கரைகளை உடைக்கிறதே!

உறவு செல்லும் கவிதை இது
உணர்ச்சியுள்ள கவிதையிது
பாசமழை பொழிக்கின்றாய்
பாவன்மை காட்டுகின்றாய்.

இக்கவிதை இருவரிடையில்
இதுவேயின்னும் பலரிடையில்
பாராட்டு பெற வேண்டாம்?
பயனுள்ள பொருள் தேடு.

பஞ்சத்தால் பசியால்
படையால் பிணியால்
பாடுபடும் பாமரரை
பலப்படுத்த நீ பாடு.

காலமெல்லாம் கடலினிலே
கண்ணியமாய் மீன் பிடித்தும்
கதியில்லா குடும்பங்கள்
கரைசேர கவி பாடு.

படித்ததனால் பசி போகா
பழையபடி கடல் போவோம்
பல்லவி இதை மாற்றிடவே
புதுக்கவிதை நீ பாடு.

படிப்பு வேண்டும் பணம் வேண்டும்
பதவியும் சேர்ந்தே வேண்டும்
பலர்முன்னே பாங்குடன் வாழ
பலம் தரும் கவி பாடு

கற்ற கல்வி கடலிநிலும்
மீன் பிடிக்கும் உத்தியிலும்
பயன்படுத்தி பயன்பெறவே
பண்புடனே நீ பாடு.

வேதனைகள் நமக்கிருக்க
வேகம் அதை மாற்றிடவே
வேங்கைஎன நீ எழுந்து
வேதம் போல் கவி பாடு.

வேதனையால் சோதனையால்
சோர்ந்துவிடும் நம்மவரை
நம்பிக்கை கவி பாடி
நாளெல்லாம் நீ வாழ்த்து.

முடமான நம்பிக்கையால்
முடமாகும் நம்மவர்க்கு
முயற்ச்சி திருவினையாக்குமென்ற
மந்திரக்கவி பாடு.

நமது பணம் நாம் சேர்த்து
நமது வாழ்வை வளப்படுத்த
நமது வங்கி நாம் தொடங்க
நலமான கவி பாடு.

மீனவனின் மீட்பு ஒன்றே
மீதமுள்ள நமது நாளின்
மிகச்சிறந்த பணியென்று
மிகவுடனே கவி பாடு.
பெங்களுர்- 1998

No comments:

Post a Comment