Wednesday, May 4, 2016

1991 (10)

நீயிருக்க என்னிதயம் நிம்மதியளிக்கும்
நீயின்றேல் அவ்விதயம் அமைதியிழக்கும்
நிலையில்லா கடல் போல ஆழமதடையும்
நீயின்றி ஆழம் கூட வெறுமைஎன்றிருக்கும்.

வெறுமையதே வேகமுள்ள புயலாய் மாறும்
வேறென்ன என் மனதின் நிலைஎன்றாகும்?
வேண்டாமிந்த வெறுமைநிலை என்னகத்தே
வேகமாக வரும் புயலை தடுத்திடவேணும்.

புயல் வேண்டாம், பூந்தென்றல் அதுவேபோதும்
பூங்காற்றாய் நீமட்டும் இருந்தால் போதும்
புவியெல்லாம் நீ வீச பூரிப்படையும் -வரும்
புகழெல்லாம் உன்னாலே புவியதை உணரும்.
1991
உன் சந்நிதியில் உவகை கொள்ளும் என்னிதயம்
உனைக்காண உருவில்லா துயரடையும்
உறவாலே நிறைவெய்தும் என்னுள்ளம்
உனையன்றி எந்நாளும் கலக்கம் கொள்ளும்.

நான் மட்டும் சரிபாதி, நீயன்றோ மறுபாதி
நாமிருவர் சேர்ந்தாலே நலன் கோடி.
நீயின்றி நான் தவிக்கவிடலாமோ?
நலமாக நீ வருவாய் எனை நாடி.

நிலவுமகள் வான்வெளியில் தவழ்ந்துவர
நீர்மகனும் அதைக்காண பொங்கியெழ
அதுபோல உன்வரவை எதிர்நோக்கும்
ஆண்மகனாம் என் நிலையை பாராயோ?

பார்வையொன்றே பரிசாக தந்தால் போதும்
பாவியிவன் பன்மடங்கு பூரிப்படைவேன்
பாவையுந்தன் பர்க்காட்டி சிரித்தால் போதும்
பரவசமாம் பரிசதென ஏற்றுக்கொள்வேன்.
1991
இருகோடுகள் இணையாமல் சென்றால் தானே
இரயில் ஓடும் இருப்புப்பாதை அதுவென்றாகும்.
அதுபோல நாமிருவர் இணையாதிருந்தால்
அதுவன்றோ அழகுமிகு காதல் என்றாகும்.

இரயில் ஓட அக்தோடு என் மனமும் ஓட
இலட்சியமோ அடையாமல் நான் பாட
இலக்கியத்தில் காண்கின்ற காதல்கூட
இலட்சிய காதலரென நமைக்கொண்டாட...

இலக்கியமாய் நம் காதல் இன்னும் வளர
இதயத்தில் உனை நாளும் நானும் கொணர
இலக்கணமாய் காதலுக்கு நீ அமைய
இலட்சியக்காதல் அதுவென்றாகும்.
1991
வெறுமையாக இருந்த உள்ளம்
வெகுண்டெழுந்த தென்னவென்று
வெளியுலகோர் கேட்க நன்று
வெட்கி நின்றேன் நான் அன்று.

வேண்டாத உறவுகளும்
விபரீத சிந்தைகளும்
வேடிக்கையாக வந்து
வேதனையை தந்ததின்று.

வேடனவன் வலை போட்டு
வேட்டை மானை தேடுதல் போல்
வேகமுள்ள மனமின்று
வேறதையோ தேடுதின்று.

வேடமது கலைந்தபின்பு
வேறென்ன விளைவு வரும்
வேதனைகள் தொடர்ந்து வரும்
வேகம் கூட குறைந்து வரும்.
1991
நட்பை நாடி நான் வந்தேன்-நல்
வாழ்த்தை கூறி உனை புகழ்ந்தேன்
நன்னிலம் சிறந்து நீயும் வாழ - நல்
நாயகன் இயேசுவை வேண்டி நின்றேன்.

நலம்நிறை எண்ணம் நச்செனக் கொண்டாய்
நன்றென செய்ததை தீதென கொண்டாய்
சிந்தயிர் தோன்றிய சீரான நினைவை
சீர்கெட்டதென்று சீற்றம் கொண்டாய்.

சிலவேளை நீயே இப்படியாக -என்
சிந்தையும் கலக்கம் கொள்வதை பாராய்
உள்ளத்தை புரியாதுணர்வை இழக்கும்
உனக்கென கூற எனக்கென உண்டு.
1991
தூசு படிந்த என் இதய வீணையை
துடைக்க வந்தவள் நீ
துருப்பிடித்த அதன் நரம்புகளை
துலங்க வைத்தவள் நீ.
தூங்கிக்கிடந்த என் இதய ராகத்தை
துயிலெழ செய்தவளும் நீயே!

துறவுக்காக உறவை முறித்த என்னை
உறவைச்சொல்லி துறவை துரத்திட
தூண்டுபவளும் நீயன்றோ?

மணமதை துறந்தேன் -என்
மனமதை நிறைத்தேன்
மன்னவன் தனது மாசுறு மொழியால்
மாதே உந்தன் மயக்கும் விழியால்...

மயங்கிய மனதின் மருந்தென நீயும்
மறுபடி வந்தெனை உணர்த்திவிடு
மணமதை தந்து மகிழ்வுற செய்யும்
மலர்போல் உன்னை தந்துவிடு.
1991
அன்றொருநாள் பெண்ணொருத்தி
ஆட்கொள்ள ஆசைப்பட்டாள்
இயலவில்லை இன்றுவரை
ஈங்கிதோ நீயொருத்தி
உனையளித்து உறவுகொள்ள
ஊடலுடன் முனைகின்றாய்!
என்பொருட்டு ஏங்கும் நீ
ஏமாற்றம் அடைவாயோ?
ஐயமுற கேட்க்கின்றேன்
ஒருவேளை உனை நாடி
ஓடோடி வந்தாலும
முல்லைமலர் பல் காட்டி- நீ
முகமலர்ந்து சிரித்திடவே
முத்துக்கள் சிதறுவதாய்-தவ
முனிவர்கூட நினைப்பனரே.

முகம்நிறைய கௌரவமாய்-நீ
முறையின்றி போவதென்ன?
முன்கோபம் போல் காட்டி -நீ
மூடி மறைப்பதென்ன?

'
சாவைவிட வலுவாமே காதலென்று'
'
சங்கீர்த்தனம்'கூட சாற்றும்போது
சாதாரண பெண்ணொருத்தி
சாதிக்க முயல்வதென்ன?

சாவுக்கே சவால் விடும் காதலுக்கு
சரிநிகராய் நீயிருக்க விருப்பமெனில்
சாகசங்கள் புரியவேண்டும் -இன்னும்
சாபம்கூட ஏற்க்கவேண்டும்
1991
கடிதம்போல் வந்ததென்ன?
கவனத்தை கவர்ந்ததென்ன?
காதல்கொண்ட கள்ள உள்ளம்
கலையுள்ள கருணை உள்ளம்.

கவிதையன்று பாடிவிட்டேன்
கருத்தறிய காத்திருந்தேன்
கருத்தெனவே கடிதமொன்று
கண்டபோதோ கலங்கிநின்றேன்.

கடவுள் பற்றை பக்தி என்பர்
காதற்ப் பற்றோ காமமென்பர்
காதற்பற்றும் கடவுள்பற்றென
கண்டதனால் காதல் கொண்டேன்.

என் போன்ற ஒருவனுக்கு
என் இந்த காதல் இன்பம்?
காதல் கொண்ட நீ இந்த
கருத்தினையே ஏர்ப்பாயா?
1991
கண்டதும் காதல்கொண்ட எனை - உன்
கண்களும் காந்தமாக கவர்ந்திடவே
கவிதையொன்று பாடி உனை - என்
காதல் மனம் காட்ட வந்தேன்.

உனைக்காண உதவிபல கேட்டுவந்தேன்
கேட்டவற்றை கேட்டபடி தந்துவந்தாய்
உதவிக்கு உளம் மகிழ்ந்து நன்றிசொல்ல
உனக்கென்று கவிதையொன்று பாடவந்தேன்.

உன் கண்ணிருக்க கவிதையெல்லாம் வீணே
நீயருகிருக்க கலையழகொன்றும் காணேன்
உன் குரலென்றும் இசைபோன்ற பண்ணே
நீ நடந்துவர நடனம் கூட பாரேன்.

இப்படியும் இன்ப நிலை எயதிடவே - என்
இதயமது இனியுன்னை கெஞ்சும்
இந்நிலைக்கு எனைக்கொணர்ந்த தேவி
இவ்வுதவி தந்தெனக்கு அருள்புரிக கொஞ்சம்.

காவியங்கள் பல்வேறு பாடக்கேட்டேன் -இன்னும்
ஓவியங்கள் வண்ண வண்ண எழிலில் கண்டேன்
என்றிருந்தும் உனைப்போன்ற காவியமோ ஓவியமோ
எங்கணுமே கேட்டதில்லை கண்டதில்லை கண்ணே.

நீ சிரித்தால் முத்துதிர பார்ப்பேன்
நீ சினந்தால் சத்துதிர உணர்வேன்
நீ மொழிந்தால் இனிப்பதென சுவைப்பேன்
நீ இழந்தால் கசப்பதென அறிவேன்.

நீ வாழ நித்தமும் யான் வேண்டுகிறேன்
நிலையான புகழ் உனக்கு வாழ்த்துகிறேன்
நீங்காத இன்பம் நிழல்போல தொடர
நிகரில்லா தலைவனையே வேண்டுகிறேன்.
1991


No comments:

Post a Comment